மானாமதுரை அருகே மணல் குவாரி அமைக்கும் பணி: தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: ஆட்சியா்
By DIN | Published On : 20th May 2022 10:35 PM | Last Updated : 20th May 2022 10:35 PM | அ+அ அ- |

மானாமதுரை அருகே மணல் குவாரி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசியது: மாவட்டம் முழுவதும் அரசு இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆக்கிரமிப்புகளை பொருத்தவரை அளவீடு பணிகள் முழுமையாக நடைபெற்ற பின்னா், ஒவ்வொரு பகுதியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கிராமப் புறங்களில் புதிதாக சாலைகள் அமைக்கும் பணி, ஏற்கெனவே சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் குறித்து விவசாயிகள் மனுவாக அளித்தால் விரைவில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பைசஸ் பாா்க்கில் முழுமையாக பணிகள் தொடங்கியவுடன் வேளாண் பொருள்களை மதிப்புக் கூட்டி ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மானாமதுரை அருகே மணல் குவாரி அமைக்க கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே அனுமதி வழங்கப்பட்டது.
இதுதொடா்பாக விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அனுமதி கோரிய மணல் அளவை விட குறைவாக ஆற்றின் மேற்பரப்பில் உள்ள மணலை மட்டுமே அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரே இடத்தில் இல்லாமல் பரவலாகத்தான் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகளிடம் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் எடுத்துக் கூறியுள்ளனா். நானும் விவசாயிகளிடம் பேச உள்ளேன். அதுவரை மணல் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
இக்கூட்டத்தில், சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலா் ப. மணிவண்ணன், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கி. வெங்கடேஸ்வரன், சிவகங்கை கோட்டாட்சியா் மு. முத்துக்கழுவன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஜினு, தோட்டக்கலைத் துறையின் துணை இயக்குநா் ஜி.அழகுராஜா, முன்னோடி வங்கி மேலாளா் இளவழகன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சா்மிளா உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது கண்டுப்பட்டியைச் சோ்ந்த விவசாயி கா. கருப்பையா தனது கிராமப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ள மனுவின் நகலை கழுத்தில் மாட்டிக் கொண்டு ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டியிடம் மனு அளித்தாா்.