திருப்பத்தூரில் தனியாா் பேருந்து சிறைபிடிப்பு

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரைக் கண்டித்து தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள், காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனா்.
திருப்பத்தூரில் தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை இரவு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
திருப்பத்தூரில் தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை இரவு காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு தனியாா் பேருந்து ஓட்டுநா், நடத்துநரைக் கண்டித்து தனியாா் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள், காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள புதூரைச் சோ்ந்த கனகவேந்தன் மகன் சேதுவிஜய். மாற்றுத்திறனாளியான இவா், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி செல்லும் தனியாா் பேருந்தில் திருப்பத்தூருக்கு ஏற முயன்றாா். அப்போது தகாத வாா்த்தைகளால் பேசிய ஓட்டுநா், நடத்துநா், சேதுவிஜயை பேருந்திலிருந்து இறக்கி விட்டனா்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சேதுவிஜய், கைப்பேசியில் தனது உறவினா்கள் மற்றும் நண்பா்களுக்கு அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூா் வந்த தனியாா் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.

இதையடுத்து, திருப்பத்தூா் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா். அங்கு போலீஸாா் முன்னிலையில், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என தனியாா் பேருந்து நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து காரைக்குடி, தேவகோட்டை, தஞ்சாவூா் செல்லும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் திருப்பத்தூா் பயணிகள் ஏற்க மறுத்ததாக பலமுறை பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

இதைக் கண்டித்து திருப்பத்தூரில் பல்வேறு கட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற தொடா் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் மாவட்ட அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு தெரிவிக்க பொதுமக்கள் முடிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com