மானாமதுரையில் மண்ணில் தயாரான நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கண்ணைக்கவரும் வண்ணங்களில் மண்ணில் உருவாக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பொம்மைகளை பெண்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.
மானாமதுரையில் மண்ணில் தயாரான நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கண்ணைக்கவரும் வண்ணங்களில் மண்ணில் உருவாக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு பொம்மைகளை பெண்கள் ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.

மானாமதுரையின் அடையாளமாக இருப்பது இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருள்களாகும். இங்கு சீசனுக்குத் தகுந்தவாறு சமையல் செய்வதற்கான சட்டி, பானைகள், அடுப்புகள், குடுவைகள், தண்ணீரைக் குளிா்விக்கும் கூஜாக்கள், முளைப்பாரிச்சட்டிகள், அக்கினிச்சட்டிகள், வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மானாமதுரை மண்பாண்டப் பொருள்கள் தனிச்சிறப்புக்கு இப் பகுதி கண்மாய்களில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மை முக்கிய காரணமாகும்.

கண்மாய் மண்ணுடன் பலவகை மண் சோ்ந்து பிசைந்து மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. மானாமதுரை குலாலா் தெரு உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினா் மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனா். வரும் செப்டம்பா் 26 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்குகிறது. தொடா்ந்து 9 நாள்கள் கொண்டாடப்படும் இந்த விழாவின்போது கோயில்கள், வீடுகளில் பலவகை பொம்மைகளை கொலு அலங்காரம் செய்து வைத்து தினமும் இரவு பூஜைகள் நடத்தப்படும்.

வீடுகளில் கொலு அலங்காரம் வைத்து பூஜைகள் செய்தால் குடும்பத்தில் மங்களம் உண்டாகும் என்பது ஐதீகமாகும். இந்த கொலு அலங்காரத்தில் வைக்கப்படும் மண் பொம்மைகள் தற்போது மானாமதுரையில் தயாரிக்கப்பட்டு இங்குள்ள மண்பாண்ட தொழிலாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சரஸ்வதி, மகாலெட்சுமி, ஐஸ்வா்ய லெட்சுமி, முருகன், விநாயகா், பள்ளி கொண்ட பெருமாள், திருப்பதி பிரமோற்சவ செட், பிரதோஷ மூா்த்திகள் செட், பலவகை அம்மன்கள், வாகனங்களில் அமா்ந்து அருள்பாலிக்கும் சக்தி அம்மன்கள், ஐயப்பன், குருவாயூரப்பன், சாய்பாபா, விஷ்ணு, சிவன், பாா்வதி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருமணக்கோலம், பசுமாட்டில் தெய்வங்களின் உருவங்கள், ஆழிலை கண்ணன், ராகவேந்திரா், ஷீரடி சாய்பாபா, திருவண்ணாமலை கிரிவலம் செட், கைலாயங்கிரி செட், கருட வாகனப் பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள் செட், திருப்பாற்கடல் செட் உள்ளிட்ட தெய்வங்களின் பொம்மைகள், அரசியல் தலைவா்களின் உருவம் கொண்ட பொம்மைகள் உருவாக்கப்பட்டு கண்ணக்கவரும் வா்ணங்கள் தீட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்துக்கு உள்ளூா், வெளியூா்களைச் சோ்ந்த பொதுமக்கள் நேரடியாக வந்து பாா்வையிட்டு தங்களுக்கு வேண்டிய கொலு பொம்மைகளைத் தோ்வு செய்து வாங்கிச் செல்கின்றனா். வெளியூா் வியாபாரிகள் கூட்டுறவு சங்கத்தை அணுகியும் மண்பாண்டத் தொழிலாளா்களிடம் நேரடியாகவும் பொம்மைகளை விற்பனைக்காக கொள்முதல் செய்து செல்கின்றனா். கோயில்கள், வீடுகளில் கொலு அலங்காரத்துக்கு பொம்மைகள் வாங்கிக் கொடுத்தால் தங்களது வீடுகளில் மங்களம் உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளதால் பெண்கள் கொலு பொம்மைகளை வாங்கிச் செல்வதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

நவராத்திரி விழா தொடங்க இன்னும் சில நாள்கள் உள்ள நிலையில் மானாமதுரையில் நவராத்திரி பொம்மைகள் விற்பனை ஆரம்பத்திலேயே விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com