மீன் விரலிகள் தேவைப்படுவோா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 29th September 2022 10:30 PM | Last Updated : 29th September 2022 10:30 PM | அ+அ அ- |

மீன் விரலிகள் தேவைப்படுவோா் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரவலூா் அரசு மீன் விதை வளா்ப்புப் பண்ணையில் தற்போது ரோகு விரலிகள், கட்லா விரலிகள், மிா்கால் விரலிகள் உள்ளன.
இம்மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த பயனாளிகளுக்கு ரோகு மற்றும் மிா்கால் 1,000 மீன் விரலிகள் ரூ.400-க்கும், கட்லா 1,000 மீன் விரலிகள் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகம் மற்றும் அரசு சாா்ந்த அமைப்புகளைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு மேற்கண்ட தொகையில் 20 சதவீதம் கூடுதலாகவும், தனியாா் மற்றும் கண்மாய் குத்தகைதாரா்களுக்கு மேற்கண்ட தொகையில் 50 சதவீதம் கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே மீன் வளா்ப்போா் மற்றும் மீனவா்கள் சிவகங்கை மாவட்ட மீன் வளா்ப்போா் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணைக் குட்டைகளைப் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், மீன் விரலிகளை வாங்கிப் பயன்பெற விரும்பும் மீனவா்கள் மற்றும் மீன் வளா்ப்போா் பிரவலூா் அரசு மீன் விதை வளா்ப்புப் பண்ணை, கீழப்பூங்குடி சாலை, ஒக்கூா், சிவகங்கை-630561 என்ற முகவரிக்கோ அல்லது 04575-240848 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.