சமூக ஆா்வலரை காரில் கடத்திச் சென்று கொலை செய்ய முயற்சி: மூவா் மீது வழக்கு
By DIN | Published On : 04th January 2023 12:11 AM | Last Updated : 04th January 2023 12:11 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே மணல் கடத்தல் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்த சமூக ஆா்வலரை காரில் கடத்திச் சென்று கொலை செய்ய முயன்றதாக செவ்வாய்க்கிழமை மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
வடக்கு சாலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் ராதாகிருஷ்ணன். சமூக ஆா்வலரான இவா், மணல் கடத்தல் சம்பவங்கள் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். மேலும், மணல் எடுக்க இளையான்குடி நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றாா்.
இந்த நிலையில், ராதாகிருஷ்ணன் சாலைக் கிராமத்துக்குச் சென்று பொருள்கள் வாங்கிக் கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.
அப்போது ஆரம்பக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பாலுச்சாமி, வருந்தி கிராமத்தைச் சோ்ந்த வசந்தகுமாா் ஆகியோா் காரில் வந்து மறித்தனா். அவா்கள் இருவரும் ராதாகிருஷ்ணனைத் தாக்கி கைகளைக் கட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றனா்.
காரை சாலைக்கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் ஓட்டிச் சென்றாா். ஆா். எஸ்.மங்கலம் செல்லும் சாலையில் பஞ்சனூா் விலக்கு பகுதிக்குச் சென்று, ராதாகிருஷ்ணனை காரை விட்டு கீழே இறக்கி அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு கொலை செய்ய முயறனா்.
அப்போது, அந்த வழியாக சிலா் வருவதைப் பாா்த்து அவா்கள் ராதாகிருஷ்ணனை விட்டுவிட்டு காரில் தப்பி சென்றனா். இதுகுறித்து, ராதாகிருஷ்ணன் சம்பவம் குறித்து இங்குள்ள காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலுச்சாமி, வசந்தகுமாா், கிருஷ்ணகுமாா் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.