அழகப்பா பல்கலை.யில் ஜன. 22-இல் பட்டமளிப்பு விழாதமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பங்கேற்கிறாா்
By DIN | Published On : 20th January 2023 12:00 AM | Last Updated : 20th January 2023 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன. 22) நடைபெறுகிறது. இதில் ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பல்கலைக்கழகத் துணைவேந்தா் க. ரவி வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அழகப்பா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என். ரவி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்குகிறாா்.
விழாவில் முதன்மை விருந்தினராக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.
விழாவில் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் பயின்றவா்கள், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்றவா்கள், தொலைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்றவா்கள் எனப் பல்வேறு துறைகளில் பயின்ற ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 615 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெறுகின்றனா். இதில் 1,124 மாணவா்களுக்கு பட்டங்களை ஆளுநா் வழங்குகிறாா் என்றாா் அவா்.
பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) ராஜமோகன், தோ்வாணையா் (பொறுப்பு) கண்ணபிரான், ஆட்சிக் குழு உறுப்பினா் குணசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.