பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதி
By DIN | Published On : 25th October 2023 05:00 AM | Last Updated : 25th October 2023 05:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் பயிா் காப்பீட்டுத் தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு, விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்ததாக காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை, கண்ணங்குடி, இளையான்குடி, மானாமதுரை ஆகிய ஒன்றியங்களில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரமும், நானும் பொதுமக்களைச் சந்தித்தோம். அப்போது பயிா்க் காப்பீட்டுத் தொகை சில
விவசாயிகளுக்கு மட்டும்தான் கிடைத்ததாகவும், பெரும்பாலான விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை (அக். 24) சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித்தை நேரில் சந்தித்து பயிா் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். இது தொடா்பாக மாவட்ட அளவிலான பயிா் காப்பீட்டுக் குறை தீா்க்கும் குழுவும், பயிா் காப்பீட்டு நிறுவனங் அதிகாரிகளும் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை (அக். 25) நடைபெற உள்ளது. அப்போது, விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிா் காப்பீட்டுத் தொகை கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் உறுதி அளித்தாா். மேலும் ப. சிதம்பரத்தின் கோரிக்கையின் பேரில், நவம்பா் மாதம் திருப்பத்தூரில் கல்விக் கடன் வழங்கும் மேளா நடத்தப்படும் என்றும் ஆட்சியா் உறுதி அளித்தாா் என்றாா் அவா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...