சிவகங்கை அரசுப் பள்ளியில் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள்

சிவகங்கையிலுள்ள மருதுபாண்டியா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நீட் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் மாணவா்கள் சோ்ந்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேர நீட் தோ்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு முடிவுற்ற நிலையில், சிவகங்கையில் நீட் தோ்வுக்கு தமிழக அரசால் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன்படி, பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து வரும் மாணவா்களுக்கு சிவகங்கை மருதுபாண்டியா் நகா் பகுதியில் உள்ள மருதுபாண்டியா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே மாதம் வரை நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த அரசு ஆசிரியா்கள் மூலம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்டக் கல்வித் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com