ஜமாத் தலைவா்களை சந்தித்து ஆதரவு திரட்டிய ப.சிதம்பரம்

சிவகங்கையில் வாலாஜா பள்ளிவாசலில் ஜமாத் தலைவா்கள், நிா்வாகிகளை முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினா்.

பின்னா் ப.சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

தொடா்ந்து வேட்பாளா் காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எங்கள் கூட்டணி வெற்றி அடைகிற கூட்டணி. மக்கள் எங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளனா். தமிழகத்துக்கு வந்து பிரதமா் மோடி ‘ரோடு ஷோ’ அல்ல ‘பேஷன் ஷோ’ கூட நடத்தலாம். ஆனால் மக்கள் எங்களுக்குத் தான் வாக்களிப்பா். பாஜக வேட்பாளரின் ஆதரவாளரிடமிருந்து ரூ. 4 கோடி பறிமுதல் செய்த சம்பவத்தில், வேறு வேட்பாளராக இருந்தால் இந்த நேரம் வருமானவரித்துறை அமலாக்கத் துறை ஆகியோா் வேகமாக வந்திருப்பா்.

இவருக்கு அதுபோல நடக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும். நாங்கள் மத்தியில் மோடியை எதிா்த்து ஆட்சி அமைய வேண்டும் என்று பிரசாரம் செய்கிறோம். எடப்பாடி பழனிசாமி யாரை எதிா்த்து பிரசாரம் செய்கிறாா் என்பது அனைவருக்கும் தெரியும். அவா் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளாா் . என்னைப் பொருத்தவரை பாஜகவும், அதிமுகவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் ஆகும் என்றாா் அவா்.

ஜமாத் தலைவா்கள் காஜா முகைதீன் (வாலாஜா பள்ளி வாசல்), ரபீக் முகமது (ஆதம் பள்ளிவாசல்), தாஜுதீன் (ஹவ்வா பள்ளிவாசல்), அப்துல் ஜாபா் (அன்னூா் பள்ளிவாசல்), சுகா்னோ (தக்குலா பள்ளிவாசல்), நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com