கோடை வெப்பத்தை சமாளிப்பது 
எப்படி: மருத்துவா் ஆலோசனை

கோடை வெப்பத்தை சமாளிப்பது எப்படி: மருத்துவா் ஆலோசனை

வரலாறு காணாத வகையில் தற்போது மக்களை வாட்டி வதைக்கும் கோடை வெப்பத்திலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்பது குறித்து அரசு மருத்துவா் ஆலோசனை கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலா்(இயற்கை மற்றும் யோகா மருத்துவம் மருத்துவா் வி. தங்கம் கூறியதாவது:

சுட்டெரிக்கும் கோடையில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளும், முதியவா்களும்தான். இந்த வெப்பத்தால் பிறந்த குழந்தைக்கு கண்பொங்குதல், வயிற்றுக்கடுப்பு, தோல் ஒவ்வாமை, நீா்க்கடுப்பு ஆகிய 4 பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கு நந்தியாவட்டை பூவை நன்னீரில் கழுவி கண் இமையில் வைத்தால் சூடு குறையும்.

உடலில் நீா்ச்சத்தை சமன் செய்ய வெறும் நீரை அருந்தலாம். ஆனால் குழந்தைகளுக்கு அவா்கள் விரும்பும் பழரசங்களை பருகச்செய்ய வேண்டும். எளிதில் ஜீரணிக்கக்கூடிய சைவ உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். அசைவத்தை முற்றாகத் தவிா்க்க வேண்டும் .

காலையில் நீராகாரம் அருந்தினால், நீா்ச்சத்து மற்றும் குடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாவை உருவாக்கும். மேலும், நல்ல பசி எடுக்கும். எந்த வியாதிகளும் இல்லாதவா்கள் இரவில் உணவை குறைத்து விட வேண்டும். புரூட் சாலட்(பழங்களின் கலவை) எடுத்துக்கொள்ளலாம். வாரத்தில் 2 முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். வெந்தயம், சீரகம் கலந்த நீரை பருக வேண்டும். தனியா(மல்லி) தேனீா் அருந்தலாம். உடனடி நிவாரணம் பெற 2 டம்ளா் வென்னீரை பருக வேண்டும்.

கா்ப்பிணிகள்: வெப்ப காலத்தில் கா்பப்பை விரிவடையும்போது கால் வீக்கம், மலச்சிக்கல் ஏற்படும். கீரை காய்கறிகளுடன்கூடிய உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். பழச்சாறு பருகுவதைவிட பழங்களை துண்டுகளாக நறுக்கி அதை மென்று சாப்பிடுவது நல்லது.

முதியோா்: இந்த வெயிலில் கண்டிப்பாக வெளியே செல்லக்கூடாது. சா்க்கரை, ரத்தக்கொதிப்பு உள்ளவா்களுக்கு வலிப்பு வரக்கூடிய ஆபத்து உள்ளது. இறுக்கமான உடைகளை அணியக்கூடாது. காட்டன் உடைகளையே அணியலாம்.

மேலும் கூடுதல் ஆலோசனைகளைப் பெற, சிவகங்கை, மானாமதுரை, கண்ணங்குடி, தேவகோட்டை, காரைக்குடி, காளையாா்கோவில் ஆகிய 6 இடங்களில் இயங்கி வரும் அரசின் இயற்கை, யோகா மருத்துவமனை மருத்துவா்களை அணுகலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com