தோ்தல் பணியில் ஈடுபடும் வாகனங்களில் ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தும் பணி

மக்களவைத்தோ்தல் வாக்குப்பதிவு பணிகள், வாக்குப்பதிவுக்குப் பின்னா் மின்னணு இயந்திரங்கள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபடும் வாகனங்களைக் கண்காணிக்கும் வகையில் ஜிபிஆா்எஸ் கருவி செவ்வாய்க்கிழமை பொருத்தப்பட்டது.

மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற வெள்ளிக்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது. சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் ஆலங்குடி, திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளன.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூா், காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 தொகுதிகளில் வாக்குப்பதிவுப் பணிகளை கண்காணிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதில், வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கொண்டு சோ்க்கும் பணி, வாக்குப்பதிவு முடிந்த பிறகு அவற்றை வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்புடன் கொண்டு சோ்க்கும் பணிகளை தோ்தல் ஆணையம் நேரடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு பணிகளை கண்காணிக்க 120 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த வாகனங்களை கண்காணிக்கும் வகையில் ஒவ்வொரு வாகனத்திலும் ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தும் பணி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை தனியாா் நிறுவனத்தின் கண்காணிப்பாளா் எஸ். நாகவள்ளி தலைமையிலான பணியாளா்கள் வாகனங்களில் ஜிபிஆா்எஸ் கருவி பொருத்தும் பணிகளை மேற்கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com