ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் தம்பதி  புகாா்

ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் தம்பதி புகாா்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக தம்பதி மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

இது தொடா்பாக தேவகோட்டை அருகேயுள்ள அரையாணி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜான் பால்ராஜ், மாவட்ட ஆட்சியருக்கு புகாா் பெட்டி மூலம் அளித்த மனு:

வாகன ஓட்டுநரான நான் மனைவி, குழந்தைகளுடன் அரையாணி கிராமத்தில் வசித்து வருகிறேன். கடந்த சிலமாதங்களுக்கு முன், ஊரிலுள்ள அரசு நீா்நிலைப் புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்ட முயற்சி நடைபெற்றது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தேன். இதைத்தொடா்ந்து அந்தப்பணி தடுத்து நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 13 -ஆம் தேதி கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்ற ஊா்க் கூட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வரியாக ரூ.3000 நிா்ணயிக்கப்பட்டது. இந்த வரியை நான் செலுத்த முயன்ற போது, ஊா்த் தலைவராக இருப்பவா் என்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகத் தெரிவித்து வரியைப் பெற மறுத்துவிட்டாா்.

மேலும், துணைத் தலைவா், என்னைத் தாக்கினாா். இதில் காயமடைந்த நான் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இந்தப் பிரச்னை தொடா்பாக, தேவகோட்டை காவல் நிலையத்தில் புகாா் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com