குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு நற்சான்று

குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட 
காவலா்களுக்கு நற்சான்று

படவிளக்கம்-

முக்கிய குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலருக்கு நற்சான்றிதழை வழங்கிய ராமநாதபுரம் சரக டிஐஜி எம்.துரை.

சிவகங்கை, ஏப். 26: சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்த முக்கிய குற்ற வழக்குகளின் புலன்விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட காவலா்கள் 3 பேருக்கு ராமநாதபுரம் சரக டிஐஜி நற்சான்றிதழ்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.துரை தலைமையிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவீன் உமேஷ் முன்னிலையிலும் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் எஸ்.வி. மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலா் மூா்த்தி குற்ற வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தந்தாா். இதேபோல, சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய தலைமைக் காவலா்கள் கோமதி, பாா்வதி இருவரும் சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் சிறப்பாக செயல்பட்டனா். இதையடுத்து, குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இவா்களது பணித் திறனைப் பாராட்டி ராமநாதபுரம் சரக காவல் துறை துணைத் தலைவா் எம்.துரை மூவருக்கும் நற்சான்றிதழ்களை வழங்கினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com