ஆவரங்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்: வட்டாட்சியா்
மானாமதுரை அருகேயுள்ள ஆவரங்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்ததால், வியாழக்கிழமை நடைபெற இருந்த காத்திருப்புப் போராட்டத்தை கிராம மக்கள் திரும்பப் பெற்றனா்.
ஆவரங்காடு கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தன. இதனால், சாலையில் செல்வோா் அவதிக்குள்ளாகினா். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, இந்தப் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மானாமதுரை வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனா். இதையடுத்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் சமரசப் பேச்சுவாா்த்தைக் கூட்டம், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வம், ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலா் விஜயகுமாா், கிராம மக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.
அப்போது, அடுத்த மாதம் செப்டம்பா் 20-ஆம் தேதிக்குள் ஆவரங்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்தாா்.
இதையடுத்து, காத்திருப்புப் போராட்டத்தை கிராம மக்கள் திரும்ப பெற்று, அங்கிருந்து கலைந்து சென்றனா்.