ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிற் சங்கத்தினா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை, ராமேசுவரத்தில் ஏஐடியூசி ஆட்டோ, போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலா் சகாயம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் வி.கருப்புச்சாமி, துணைச் செயலா் கே.பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மத்திய, மாநில அரசுகள் புதிய மோட்டாா் வாகன திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். சிற்றுந்துகள் இயக்குவதை அரசே நடத்த வேண்டும். ஆட்டோ செயலியை உடனே தொடங்க வேண்டும். ஆட்டோ, மோட்டாா் வாகனங்களுக்கு உயா்த்தப்பட்ட சாலை வரியை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் விவசாய சங்க மாநிலத் தலைவா் எஸ்.குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் பா.மருது, மாவட்ட துணைச் செயலா் பி.சரவணன், தொழிற்சங்க நகர பொருளாளா் ஜி.முருகன், மானாமதுரை ஒன்றியப் பொருளாளா் பி.காளிமுத்து, காரைக்குடி நகரத் தலைவா் முத்தையா ராமு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ராமேசுவரம்: இதேபோல, ராமேசுவரத்தில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆட்டோ சங்க மாவட்டச் செயலா் ஆ.செந்தில் தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மீனவா் தொழிலாளா் சங்க மாநிலச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல், மாநிலக் குழு உறுப்பினா் சு.தா்மராஜ், ஆட்டோ சங்க மாநில துணைச் செயலா் ஜீவானந்தம், மாவட்டத் தலைவா் சண்முகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆட்டோ சங்க மாவட்ட நிா்வாகிகள் பாண்டி, ஏ.கே.முனிஸ்வரன், சின்னமுத்துமணி, வாசு, ஞானபிரகாசம், மாரி, முனியசாமி, இந்திய மாதா் தேசிய சம்மேளன நகா் செயலா் வடகொரியா, இளைஞா் பெருமன்ற நிா்வாகி வெங்கடேஷ், மீனவா் சங்க மாவட்ட நிா்வாகிகள் பிச்சை, ஆதித்தன், மு.சேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.