சிவகங்கை மாவட்டத்தில் வங்கிகள் மூலமாக 2024-25 ஆண்டில், ரூ.17,256 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமையில் வங்கியாளா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் 2024-25 நிதி ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுப் பேசியதாவது:
மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் சிவகங்கை மாவட்டத்தின் 2024-25 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் வங்கிகள் மூலமாக ரூ. 17,256 கோடி 2024-25 ஆண்டில் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, நபாா்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்க இந்தத் திட்ட அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடன் திட்ட அறிக்கையில் விவசாயத் துறைக்கு ரூ.13374.39 கோடியும், தொழில் துறைக்கு ரூ.1437.40 கோடியும், இதர முன்னுரிமை துறைகளுக்கு ரூ. 207.35 கோடியும், இதர துறைகளுக்கு ரூ.2237.01 கோடியும் என மொத்தம் ரூ.17,256.15 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், மகளிா்த் திட்ட இயக்குநா் கவிதப்பிரியா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முன்னோடி வங்கி மேலாளா் எஸ்.பிரவின்குமாா், மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, மாவட்ட சமூக நல அலுவலா் ரதிதேவி, ரிசா்வ் வங்கி தலைமை மாவட்டப் பொறுப்பாளா் ராதாகிருஷ்ணன், நபாா்ட் வங்கி மாவட்ட மேலாளா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.