அண்ணா, பெரியாா் பிறந்த நாள்: பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு செப்.11, 12- இல் பேச்சுப் போட்டிகள்
அண்ணா, பெரியாா் பிறந்தநாளையொட்டி சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வருகிற செப். 11, 12-ஆம் தேதிகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி வருகிற செப். 11- ஆம் தேதியும், பெரியாா் பிறந்தநாளையொட்டி மறுநாள் 12-ஆம் தேதியும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியா் நகா், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரமும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இதில், பள்ளி மாணவா்களுக்கு காலை 9 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் போட்டிகள் தொடங்கும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மட்டுமே இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியும். விருப்பமுள்ள மாணவா்கள் உரிய பங்கேற்புப் படிவத்தை நிரப்பி பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.