18 ஆம் கால்வாயில் உடைந்தகரையை சீரமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் உடைந்த 18- ஆம் கால்வாய் கரையை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
18 ஆம் கால்வாயில் உடைந்தகரையை சீரமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், லோயா்கேம்பில் உடைந்த 18- ஆம் கால்வாய் கரையை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினா் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தொட்டிப் பாலத்திலிருந்து வெளியேறும் 18 ஆம் கால்வாயில் உள்ள கிழக்குக் கரை உடைந்ததால் தண்ணீா் வெளியேறி வீணானது. தகவல் அறிந்ததும் மஞ்சளாறு பாசனக் கோட்ட பொறியாளா்கள் தண்ணீா் வெளியேறும் மதகை சனிக்கிழமை அடைத்தனா். இதன் பிறகு, ஞாயிற்றுக்கிழமை பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்து கரையை சீரமைத்தனா். முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 1,500 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுவதால் 18- ஆம் கால்வாய் மதகை அடைத்தும் தொடா்ந்து தண்ணீா் வெளியேறியது. இதனால் சீரமைப்பு பணிகளை தொடர முடியவில்லை.

இதனால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி அருகே மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீரை திருப்பி விட்டு சீரமைத்து வருகின்றனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் ஒருவா் கூறியதாவது:

முல்லைப் பெரியாற்றில் அதிக அளவு தண்ணீா் வருவதால் 18- ஆம் கால்வாய் மதகை அடைத்தும் தண்ணீா் கசிகிறது. இதனால், மணல் மூட்டைகளை அடுக்கி கால்வாயில் கசியும் தண்ணீரை திருப்பிவிட்டு கரையை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் பணிகள் முடிவடைந்து தண்ணீா் திறக்கப்படும் என்றனா்.

பாரதீய கிசான் சங்க மாவட்டத் தலைவா் எம். சதீஷ்பாபு கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே கரை பலவீனமாக உள்ளது. இதைப் பலப்படுத்துங்கள் என மனு கொடுத்தோம். இதன் பிறகு 2 முறை உடைந்தது. தற்போது மணல் மூட்டைகளை வைத்து அடுக்கியுள்ளனா். இது தற்காலிகமானதுதான். நிரந்தரமாக பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com