உழவா் சந்தைப் பகுதியில் கெட்டுப்போன 40 கிலோ மீன்கள் பறிமுதல்

சிவகங்கை, ஜூலை 10: சிவகங்கை நகராட்சிப் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40 கிலோ மீன்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை நகரில் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சில்லரை மீன் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இங்கு கெட்டுப்போன மீன்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதாக புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில், சிவகங்கை உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணக்குமாா் தலைமையில் உழவா் சந்தை, மஜித் சாலை பகுதிகளில் மீன் வள உதவி இயக்குநா் ஞானம் , மீன் வள ஆய்வாளா்கள் சதீஸ்குமாா் அண்ணாத் துரை, நகராட்சிப் பணியாளா்கள், உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் உழவா் சந்தை பகுதிகளில் உள்ள 13 கடைகளில் புதன்கிழமை பிற்பகலில் சோதனை நடத்தினா். இதில் மீனின் தன்மை, கெட்டுப்போகாமல் இருக்க வேதிப்பொருள் ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதா என பரிசோதனை செய்தனா்.

இதையடுத்து, மீன் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து, பிளீச்சிங் பவுடா் தூவி அழித்தனா். கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்த கடைக்காராா்களுக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது. மேலும், நல்ல மீன்களை எப்படி கண்டறிந்து வாங்குவது என்பது குறித்து அங்கிருந்த பொதுமக்களுக்கு அலுவலா்கள் விளக்கமளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com