திருப்புவனத்தில் உள்ள நகைக் கடையில்  ஆய்வு மேற்கொண்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அலுவலா்கள்.
திருப்புவனத்தில் உள்ள நகைக் கடையில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அலுவலா்கள்.

முத்திரையிடப்படாத தராசுகள் வைத்திருந்ததாக 36 நிறுவனங்களுக்கு அபராதம்

சிவகங்கை மாவட்டத்தில் தொழிலாளா்கள் நலன், திறன் மேம்பாட்டுத்துறை அதிகாரிகள், வணிக நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 36 நிறுவனங்களில் இருந்து முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள், எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கை தொழிலாளா்கள் நலன், திறன்மேம்பாட்டுத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) இ. முத்து தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வாளா், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள், முத்திரை ஆய்வாளா் ஆகியோா் காரைக்குடி, தேவகோட்டை, காளையாா்கோவில், திருப்புவனம் ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், அஞ்சலகங்களில் சட்ட முறை எடையளவுச் சட்டம், இதன் விதிகளின் கீழ் கடந்த 3 நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் மறுமுத்திரையிடப்படாத மின்னணு தராசுகள்- 5, மறுமுத்திரையிடப்படாத எடைக் கற்கள்- 6, சீலிடப்படாத தராசுகள்- 3 என மொத்தம் 14 பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், புதுப்பித்தல் சான்று வைக்காத 9 நிறுவனங்கள், எடைக் கற்களை பராமரிக்காத 13 நிறுவனங்கள் உள்ளிட்ட 36 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல, எந்தவித சான்றுரைகளும் இல்லாமல் பொட்டலப் பொருள்களை விற்பனை செய்த 3 நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து, சிவகங்கை தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) இ. முத்து கூறியதாவது:

வாடிக்கையாளா்களின் நலன் கருதி, காலாண்டுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு 4 முறை மாவட்டம் முழுவதும் உள்ள பல வகை வணிக நிறுவனங்களில் இந்த கூட்டாய்வு நடத்தப்படுகிறது. லிட்டா் படிகளுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறையும், மின்னணு தராசுகள், மூட்டைகளை எடை போடும் ‘பிளாட்பாா்ம்’ தராசுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் கட்டாயம் மறுமுத்திரையிட வேண்டும். இதை சரியாக கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா்அவா்.

X
Dinamani
www.dinamani.com