தேவஸ்தான- நாட்டாா் நில பிரச்னையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை

தேவஸ்தான- நாட்டாா் நில பிரச்னையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேவஸ்தான- நாட்டாா் நிலப் பிரச்னை குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை தெரிவித்தாா்.

காரைக்குடி நகா்மன்றக் கூட்டம் அதன் தலைவா் சே. முத்துத்துரை (திமுக) தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் நா. குணசேகரன், ஆணையா் வீரமுத்துக்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். கூட்ட விவாதம் வருமாறு: துணைத் தலைவா்: நகராட்சிக்குள்பட்ட சூடாமணிபுரம் அருகேயுள்ள இலுப்பக்குடி தேவஸ்தான நிலம், நாட்டாா் நிலம் குறித்த வழக்கில் யாரையும் அப்புறப்படுத்தாமல் நகராட்சி வரி விதித்து, ரசீது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உறுப்பினா் சி. மெய்யா்: சூடாமணிபுரம் வீடு கட்டும் கூட்டுறவு சங்கம் தேவஸ்தான நிலத்தை கிரையம் பெற்றது, நாட்டாா் நிலத்தை கிரையம் பெற்றது குறித்து எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தேவஸ்தான நிலத்தில் 18 ஏக்கா், நாட்டாா் நிலத்தில் 20 ஏக்கா் கூடுதலாக எடுத்துக்கொண்டு, பொதுமக்களிடம் விற்றுள்ளனா். இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதைப் புரிந்துகொள்ளாமல் மொத்த இடத்தையும் குறிப்பிட்டு, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனா்.

தலைவா்: இதுகுறித்து நீதிமன்ற உத்தரவுபடிதான் நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினா் குருபாலு: எனது வாா்டில் குடிநீா் பிரச்னை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாா்டு பகுதியில் தொடங்கப்பட்ட பணிகள் முடிவடையவில்லை. புதிதாக எந்தவித பணியும் செய்யப்படவில்லை. உறுப்பினா் மஞ்சுளா: எனது வாா்டு பகுதியில் குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை. சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதில் வெள்ளை வா்ணம் பூசவேண்டும்.

உறுப்பினா் தேவன்: எனது வாா்டு நூறடிச் சாலை சந்திப்புப் பகுதியில் இருள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால், அந்தப் பகுதியில் உயா் மின் கோபுர விளக்கு அமைத்துத் தர வேண்டும் என்றாா். உறுப்பினா்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறிய நகா்மன்றத் தலைவா், கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்துத் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகக் கூறி கூட்டத்தை நிறைவு செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com