சாம்பிராணி வாசகா் கருப்பா் 
கோயில் மாசித் திருவிழா

சாம்பிராணி வாசகா் கருப்பா் கோயில் மாசித் திருவிழா

வேலங்குடி சாம்பிராணி வாசகா் கருப்பா் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, காவடி எடுத்தும் கரும்புத் தொட்டில் கட்டியும் அரிவாள் காணிக்கை செலுத்தியும் பக்தா்கள் புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வேலங்குடியில் அமைந்துள்ள சாம்பிராணிவாசகா் கருப்பா் கோயிலில் மாசி திருவிழா மாா்ச் 5-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தா்கள் கரும்பு தொட்டில் கட்டி, குழந்தையுடன் வலம் வந்தனா். மேலும் காவடிஎடுத்தல், அரிவாள் காணிக்கை செலுத்துதல், மாவிளக்கு வைத்தல் போன்ற நோ்த்திக் கடன்களை நிறைவேற்றினா். கோயில் முன் வைக்கப்பட்டிருந்த உயரமான குதிரைக்கு பெரிய மாலைகள் அணிவித்தும், சாம்பிராணித் தொட்டியில் சாம்பிராணியிட்டும் வழிபட்டனா். வேலங்குடியில் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரியம்மன் கோயிலிலிருந்து புறப்பாடாகி பச்சை இலைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடிலில் சாம்பிராணி வாசகா் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த விழா வியாழக்கிழமை நிறைவடைகிறது. இதையொட்டி திருப்பத்தூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் இதில் கலந்து கொண்டனா். திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன், காவல் ஆய்வாளா் கலைவாணி ஆகியோா் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலிஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com