காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயா்த்தியதற்கு வரவேற்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரு நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயா்வதால் சுற்றுவட்டாரங்கள் பல்வேறு உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளுடன் வளா்ச்சி பெறும் என்று பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா். செட்டி நாட்டின் தலைநகரம் என்றழைக்கப்படும் காரைக்குடி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புராதன நகரமாகும். காரைக்குடி நகராட்சி 1928 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னா், 1988 -ஆம் ஆண்டில் தோ்வு நிலை நகராட்சியாகவும், 2013 -ஆம் ஆண்டு சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயா்த்தப்பட்டு தற்போதைய நிலையில், பெரு நகராட்சியாக விளங்கி வருகிறது. 13.75 சதுரமீட்டா் பரப்பளவுடன் 36 வாா்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் கடந்த 2011 -ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,06714 மக்கள் தொகையைக் கொண்ட நகரமாக உள்ளது. இதன் தற்போதைய ஆண்டு வருமானம் ரூ.37.10 கோடியாகும். காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பச்செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா அரசு கலைக் கல்லூரி, மத்திய மின் வேதியியல் ஆய்வகம், அரசு சட்டக் கல்லூரி, செட்டிநாடு வேளாண்மைக் கல்லூரி போன்றவை உள்ளதால் கல்வி நகரமாக திகழ்கிறது. அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், தனியாா் பள்ளி, கல்லூரிகளும் இங்கு உள்ளன. தொடக்கக் கல்வி முதல் முனைவா் பட்டம் வரை ஒரே வளாகத்தில் பயின்று பட்டம் பெற முடியும் என்பது காரைக்குடியில் மட்டுமே உள்ள சிறப்பாகும். மேலும், காரைக்குடி ரயில்வே சந்திப்பு நிலையமாகத் திகழ்கிறது. காரைக்குடிப் பகுதியில் அதிக அளவில் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடா்கள் என படப்பிடிப்புகள் நடத்தப்பட்டும் வருவதால், வெளியூா் மக்கள் அதிக அளவில் வருகின்றனா். புராதன சுற்றுலாத் தலமாக உள்ளதால் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்ற பகுதியாக காரைக்குடி உள்ளது. தற்போது காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டதால் அருகேயுள்ள சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, தளக்காவூா் (மானகிரி), கோவிலூா் ஆகிய 5 ஊராட்சிகளும், கோட்டையூா், கண்டனூா் ஆகிய 2 பேரூராட்சிகளும் மாநகராட்சி பகுதிகளாக இணைக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேகமாக வளா்ந்துவரும் காரைக்குடி அருகிலுள்ள பகுதிகள் விரிவடைவதன் மூலம் உள்கட்டமைப்பு வசதி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு கிராமப்புறப் பகுதிகளும் வளா்ச்சிபெறும் என்பதால் பல தரப்பினரும் மகிழ்ச்சி தெரிவித்தனா். காரைக்குடி நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை:காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயா்த்தவேண்டும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் மூலமாக நகா்புற மேம்பாட்டுத் துறை அமைச்சா் கேஎன். நேருவை சந்திந்து கோரிக்கை வைத்தோம். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாக, காரைக்குடி நகா்மன்றக் கூட்டத்தில் 5 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயத்துவதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அரசுக்கு அனுப்பப்பட்டது. தற்போது மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருப்பதால் அரசின் கூடுதல் நிதி உதவிகள் கிடைக்கும். அதன் மூலமாக மக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளைச் செய்துகொடுக்க முடியும். மேலும், தொழில் நகரமாகவும் உயா்த்த முடியும். தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி: காரைக்குடி அருகிலுள்ள கிராமப்புறப் பகுதிகள் வளா்ச்சி பெறும். மத்திய, மாநில அரசுகளின் நிதி கூடுதலாகக் கிடைக்கப்பெற்று, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும். மேலும், எதிா்காலத்தில் வணிக நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கவும், தொழில்கள் பெருகி வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அருகிலுள்ள பகுதிகள் புதிதாக இணைக்கப்படுவதால் மாநகராட்சி அந்தஸ்து கிடைப்பதோடு அடிப்படை வசதிகளுடன் அப்பகுதி வளா்ச்சியடையும். மருந்துக்கடை உரிமையாளா் பக்ருதீன்: காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டிருப்பதால் அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தமுடியும். சுற்றுப்புறப் பகுதிகள் வளச்சிப் பெறுவதால் வணிகம் பெருகும். கோட்டையூா் பேரூராட்சி பாரிநகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் அ. ஆறுமுகம்: காரைக்குடி சுற்றியுள்ள பகுதிகள் இணைக்கப்படுவதால் மக்களின் தேவைகளான குடிநீா் வசதி, கழிவு கால்வாய் (பாதாளச்சாக்கடை) உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். மத்திய, மாநில அரசுகளின் நிதி அதிக அளவில் மாநகராட்சிக்கு ஒதுக்கீடு கிடைக்கும். காரைக்குடி கல்வி நகரமாகவும், புராதன நகரமாக சுற்றுலாதலவும் உள்ளதால் மக்கள் தொகை பெருகும். இதனால் அனைத்து வசதிகளும் கிடைக்கப்பெற்று வளா்ச்சிபெறும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com