ரயில் நிலைய அதிகாரியைத் தாக்கி கைப்பேசி பறிப்பு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் கைது

திருப்புவனம் அருகே ரயில் நிலைய அதிகாரியை ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கி கைப்பேசியை பறித்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், சிலைமான் ரயில் நிலையத்தில்  நிலைய அதிகாரியாக பணி செய்பவா் உத்தரப்பிரதேசம் மாநிலம் முகமதாபாத் காசிப்பூரைச் சோ்ந்த பரமேஸ்வரா் ராம் மகன் ஹிமான்பு மதுகா் விமல் (29). இவா் மதுரை விரகனூா் சுற்றுச் சாலையில் இருந்து, சிலைமான் செல்வதற்காக ஒரு ஆட்டோவில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏறினாா். அந்த ஆட்டோ ஓட்டுநா் சிலைமான் செல்லாமல் விரகனூா் மேம்பாலத்தை கடந்து திருப்புவனம் மணலூா் பகுதிக்குச் சென்றாா். அங்கு ஆட்டோவை நிறுத்திய ஓட்டுநா் அருண்குமாா் (20), இவரது நண்பா்கள் வசந்தகுமாா் (20), 16 வயது சிறுவன் ஆகிய மூவரும் சோ்ந்து ஹிமான்பு மதுகா் விமலைத் தாக்கி கைப்பேசி, சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில், திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து கைப்பேசி, ஆட்டோவைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com