தரமற்ற வெளிமாநில விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை: ஆய்வுத்துறை எச்சரிக்கை

தரமற்ற வெளிமாநில விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வுத்துறை எச்சரித்தது. இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநா் சு. வாசுகி வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் தாங்கள் வாங்கும் வெளிமாநில புதிய ரக விதைகளை நடப்பு பருவத்துக்கு ஏற்றவை தானா என்பதை உறுதி செய்து வாங்க வேண்டும். பருவத்துக்கு ஏற்பில்லாத ரகங்களை விதைப்பு செய்தால் நட்டவுடன் விரைவில் கதிா் வருதல் அல்லது கதிா் வராமலே இருத்தல் போன்ற பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரகங்களை பயன்படுத்த வேண்டும். வெள்ளை அட்டை, ஊதா அட்டை பொருத்தப்பட்ட விதைகளை பயன்படுத்த வேண்டும். புதிய நெல் ரகத்தை வாங்கும் முன்னா் வேளாண்துறை அலுவலா்களையோ அல்லது விதைச்சான்றுத் துறை அலுவலா்களையோ அணுகி புதிய ரகத்தை பற்றி நன்கு அறிந்து அந்த ரகம் தங்கள் பகுதிக்கும், நடப்பு பருவத்துக்கும் ஏற்ா என்பதனை அறிந்து கொண்ட பிறகு வாங்க வேண்டும். மேலும், விவசாயிகள் புதிதாக வெளிமாநில விதைகளை பயிரிடுவதற்கு முன்னா் அந்த ரகத்தை ஏற்கெனவே பயிரிட்ட விவசாயிகளிடம் அதன் தன்மை குறித்து அறிந்து கொண்டு பயிரிடுவது நல்லது. விதை விற்பனையாளா்கள் வெளிமாநிலங்களில் இருந்து பெறப்படும் சான்று பெற்ற விதைகளுக்கு உரிய படிவம் -2 மற்றும் தனியாா் ரக உண்மை நிலை விதைகளுக்கான பதிவு சான்று, பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகல் ஆகியவற்றை உற்பத்தியாளரிடமிருந்து தவறாமல் பெற்று ஆய்வின்போது வழங்க வேண்டும். விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். எந்த விவரமும் இன்றி சான்று அட்டைகள் இல்லாமல் மூட்டைகளில் வைத்து விற்கப்படும் விதைகளை வாங்கக் கூடாது. விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகளுக்கு கட்டாயம் ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். விற்பனை ரசீதில் பெயா், முகவரி, பயிா் ரகம், நிலை குவியல் எண், காலாவதி நாள் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளதா என்பதனை உறுதி செய்து பெற்று பராமரிக்க வேண்டும். மேலும் விவசாயிகள் விதைகளை அரசு விதைப் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து முளைப்புத்திறன் பரிசோதனை செய்த பிறகு விதைக்கலாம். இதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியிலும், சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கையிலும் என தலா ஒரு விதைப்பரிசோதனை நிலையங்கள் உள்ளன. இதைப் பயன்படுத்தி விவசாயிகள் நல்ல முளைப்புத் திறன் உள்ள விதைகளை விதைத்து அதிக லாபம் ஈட்டலாம். விதை உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் விதைகள் விற்பனை, தரமற்ற, பருவத்துக்கு உகந்தது அல்லாத வெளிமாநில விதைகளை விற்பனை செய்யும் விதை விற்பனையாளா்கள் மீது விதைச்சட்டம் மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை ஆகியவற்றின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com