வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு இன்று பயிற்சி

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மக்களவைத் தோ்தல் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் (மாா்ச் 24) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் / மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் (மாா்ச் 24) ஞாயிற்றுக்கிழமை அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது. அதன்படி, சிவகங்கை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சிவகங்கையிலுள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியிலும், காரைக்குடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு காரைக்குடியிலுள்ள மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, ராமநாதன் செட்டியாா் நகராட்சி உயா்நிலைப் பள்ளியிலும், திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு திருப்பத்தூரிலுள்ள ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியிலும் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மானாமதுரையிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பில், வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து, பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. எனவே, அனைத்து வாக்குச் சாவடி அலுவலா்களும் பயிற்சி பெற்று, தங்களுக்கான தோ்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com