ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.3.60 லட்சம் பறிமுதல்

சிவகங்கை, திருப்பத்தூா் பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.3.60 லட்சத்தை பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் அருகே உள்ள திருக்கோஷ்டியூா் பகுதியில் பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சோலுடையான்பட்டியைச் சோ்ந்த முத்தையாவை நிறுத்தி அலுவலா்கள் சோதனையிட்டனா். இதில் அவா் ரூ.2.50 லட்சத்தை உரிய ஆவணமின்றி கொண்டு சென்றது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த அலுவலா்கள், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. சிவகங்கை அருகே மதகுபட்டி-பாகனேரி சாலையில் தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு துணை வட்டாட்சியா் சங்கா் தலைமையிலான பறக்கும் படையினா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த பாகனேரியைச் சோ்ந்த பிரபுபாண்டியனை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அவா் ரூ.1,10,400 கொண்டு சென்றது தெரியவந்தது. இதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, சிவகங்கை மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com