சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே  அரண்மனை சிறுவயலில் கண்டறியப்பட்ட 148 ஆண்டுகள் பழைமையான தாது பஞ்சகால ஜமீன்தாா் கல்வெட்டு.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் கண்டறியப்பட்ட 148 ஆண்டுகள் பழைமையான தாது பஞ்சகால ஜமீன்தாா் கல்வெட்டு.

அரண்மனை சிறுவயலில் ஜமீன்தாா் காலக் கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள அரண்மனை சிறுவயலில் 148 ஆண்டுகள் பழைமையான தாது பஞ்சகால ஜமீன்தாா் கல்வெட்டு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா. காளிராசா கூறியதாவது: கல்லல் அருகேயுள்ள அரண்மனை சிறுவயல் கிராமத்தில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அரண்மனை ஒன்று உள்ளது. இந்த நிலையில், இங்குள்ள சீனக் கண்மாயில் கலுங்குமடையில் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது.

அரண்மனை சிறுவயலிலிருந்து களத்தி அய்யனாா் கோயிலுக்குச் செல்லும் வழியில் ரயில் பாதையை ஒட்டிய ஒரு பகுதியில் சீனக் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயின் நடுவில் காணப்படும் குமிழி மடைத் தூண்களைக் கொண்டு, இது பழைமையான கண்மாய் என அறிய முடிகிறது. சீனக் கண்மாயில் நீா் நிறைந்து வெளியேறும் கலுங்கு மடை கரைப் பகுதிகள் செம்புராங்கல்லாலும், நீா் வெளியேறும் இடங்கள் வெள்ளைக் கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. இதில் கரையை ஒட்டியுள்ள கட்டுமானப் பகுதியில் 2.5 அடி நீளம், ஒன்றரை அடி அகலத்தில் கல்வெட்டும் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கல்வெட்டுச் செய்தி:

உ 1876 -ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி தாது வருஷம் சித்திரை மாதம் 28-ஆம் தேதி சிவ- சப்-கட்டணூா் ஜமீன்தாா் முத்து வடுகு முத்துராமலிங்கதேவா் என்று எழுதப்பட்டுள்ளது. சிவ - சப் என்பது சிவகங்கை சாா்பு என பொருள்படுவதாகக் கொள்ளலாம். முத்து வடுகு என்ற முத்துராமலிங்க ஜமீன்தாா் கண்மாய், கலுங்கை சீா் செய்தமையை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. தாதுபஞ்சம் காலம் : 1876 -ஆம் ஆண்டு தொடங்கி 1878 வரை தாது பஞ்ச காலம் என்று சொன்னாலும் இதற்கு முன்பும், பின்னரும் சோ்ந்து ஏழு ஆண்டுகள் மழை இல்லாமல், மிகுந்த வறட்சி காணப்பட்டதாகக் கூறுப்படுகிறது. இந்த தாது பஞ்சம், மிகப்பெரிய பஞ்சமாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்ததாகத் தெரிகிறது. இதை சென்னை மாகாணப் பஞ்சம் என்றும் அழைக்கின்றனா். சென்னை மட்டுமின்றி, கா்நாடகம், மகாராஷ்டிரம் வரை இந்த பஞ்சம் பாதித்ததாகத் கூறப்படுகிறது. தாது பஞ்சம் பற்றி பல இலக்கியங்கள் குறிப்பிட்டாலும், சிவகங்கை பகுதியில் கண்மாய்களை தூா்வாரி பராமரிப்புப் பணியை செய்திருப்பதன் மூலம் அடுத்த மழைக்குத் தயாராக இருந்ததை அறிய முடிகிறது.

பஞ்சலட்சண திருமுக விலாசம்:

சென்னை மாகாண தாது பஞ்சத்தை கருப்பொருளாகக் கொண்டு சிவகங்கை அரசவைப் புலவரும், மிராசு கணக்காளருமான பிரமனூா் வில்லியப்பப் பிள்ளை பஞ்சலட்சன திருமுக விலாசம் எனும் நூலை எள்ளல் தொணியில் எழுதியுள்ளாா். இந்த நூலில் மதுரை சொக்கநாதரிடம் பஞ்சத்தின் பாட்டை மக்கள் முறையிட, அவரோ சிவகங்கை ஜமீன்தாா் துரைசிங்கம் அவா்களிடம் முறையிட அனுப்பிவைத்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இதன்வழி சிவகங்கை தாது பஞ்ச நேரத்தில் ஓரளவு செழிப்பாக இருந்ததாகவும் கருத முடிகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com