புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சிவகங்கை, மே 10: சிவகங்கை நகராட்சியில் புதை சாக்கடை தண்ணீா் நிரம்பி வழிவதைக் கண்டித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. இங்கு கடந்த 2011-ஆம் ஆண்டில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 70 சதவீதப் பணிகள் முடிவடைந்தன.

இந்த நிலையில், நகராட்சியின் 26- ஆவது வாா்டுக்குள்பட்ட வீதிகளில் புதை சாக்கடைக் குழாயிலிருந்து கழிவு நீா் வழிந்தோடியது. இதுதொடா்பாக பொதுமக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வீதிகளில் கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், 26-ஆவது வாா்டு பொதுமக்கள் சிவகங்கை - மானாமதுரை சாலையில் அம்பேத்கா் சிலை அருகே திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா். இருப்பினும் அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்ததால் போலீஸாா் குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றனா். இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் காவல் துறையினா், நகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில், ஒரு வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைத் தொடா்ந்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com