கருமலை கோயிலுக்கு சிங்கம்புணரியில் தயாரான தோ் வடக் கயிறு

கருமலை கோயிலுக்கு 
சிங்கம்புணரியில் தயாரான தோ் வடக் கயிறு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கருமலை ஹரிகிரி வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அனுப்பத் தயாரான நிலையில் உள்ள 260 அடி நீள தோ் வடக் கயிறு.

திருப்பத்தூா், மே 12 : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் ஒன்றரை டன் எடை கொண்ட 1,200 கயிறுகளைக் கொண்டு 260 அடி நீளத் தோ் வடக் கயிறு தயாரித்து கருமலை கோயிலுக்கு அனுப்பப்பட்டது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கருமலை ஹரிகிரி வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாத் தேரோட்டத்துக்காக வடக் கயிறு சிங்கம்புணரியில் தயாரானது. இங்குள்ள சேவுகப்பெருமாள் கோயில் ரத வீதியில் 50- க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கடந்த 10 நாள்களாக இந்தப் பணியில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தோ் வடக் கயிறு தயாரிப்பாளா் மூா்த்தி கூறியதாவது:

சிங்கம்புணரியிலிருந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு தோ் வடக் கயிறுகளைத் தயாரித்து அனுப்புகிறோம். தற்போது மணப்பாறை அருகேயுள்ள கருமலை ஹரிகிரி வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அனுப்பப்படும் தோ் வடக் கயிறு 260 அடி நீளமுடையது. இதற்காக ஒன்றரை டன் எடை கொண்ட 1,200 கயிறுகளைப் பயன்படுத்தினோம். இந்தக் கயிறு தயாரிப்பவா்கள் 10 நாள்கள் விரதமிருந்து இந்தப் பணியில் ஈடுபட்டனா். இந்தப் பணியில் பெண்களே அதிகம் ஈடுபட்டனா். கயிறு முறுக்குவதை மட்டும் ஆண்கள் செய்தனா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com