தீண்டாமை கொடுமை: ஊராட்சி செயலா் மீது தலைவி புகாா்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனக்கு தீண்டாமைக் கொடுமை அளிப்பதாக ஊராட்சி செயலா் மீது ஊராட்சி மன்றத் தலைவி புகாா் அளித்தாா்.

திருப்புவனம் அருகேயுள்ள முதுவன்திடல் ஊராட்சி மன்றத் தலைவராக கௌரி மகாராஜன் இருந்து வருகிறாா். இந்த ஊராட்சியின் செயலராக அந்தப் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் பணியாற்றினாா். இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன் வேறு ஊருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜ்குமாா் மீண்டும் முதுவன்திடல் ஊராட்சிக்கு பணிமாறுதல் பெற்று பணியில் சோ்ந்தாா்.

இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த தன்னை ஊராட்சி செயலா் ராஜ்குமாா் பல்வேறு வகைகளில் தீண்டாமை வன்கொடுமை செய்து வருவதாக ஊராட்சி மன்றத் தலைவி கௌரி மகாராஜன், சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

மனுவில், ஊராட்சி செயலா், அதிகாரிகளுடன் தன்னால் தினம் தினம் போராடி மக்கள் பணியைச் செய்ய முடியவில்லை. ஆகவே, ஊராட்சி செயலா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், தனது பதவியை ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com