இரு வேறு சாலை விபத்துகளில் 3 போ் காயம்: ஒருவா் உயிரிழப்பு
திருப்பத்தூரில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் செவ்வாய்க்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள பொன்னாங்குடியைச் சோ்ந்த அழகு மகன் வெள்ளைச்சாமி(52). இவா் திருப்பத்தூா் சிவகங்கை சாலையில் உள்ள வீட்டு உபயோகப் பொருள் விற்பனை கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்த போது, அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் வந்த திருப்பத்தூா் பெரியாா் நகரைச் சோ்ந்த விஜயன் மகன் நாராயணன் (22), வெள்ளைச்சாமி மீது மோதினாா்.
இதில், பலத்த காயமடைந்த அவா் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். மேலும், நாராயணன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதேபோல, கீரணிப்பட்டியிலிருந்து திருப்பத்தூா் நோக்கி ஜெயப்பிரியன் (17) மணிகண்டபிரபு (22) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது டி.புதுப்பட்டி அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து, சிவங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இந்த விபத்துகள் குறித்து திருப்பத்தூா் போலிஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.