வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ 3.36 லட்சம் பறிமுதல்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனை மேற்கொண்ட போது அலுவலகத்தில் இருந்து ரூ.3.36 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சப் பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சிவகங்கை ஊழல்தடுப்பு கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளா் ஜான் பிரிட்டோ தலைமையில் ஆய்வாளா் ஜேசுதாஸ் , உதவி ஆய்வாளா் ராஜா முகமது உள்ளிட்ட போலீஸாா் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த ஒருவா் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரை பாா்த்ததும் தப்பிச் செல்ல முயன்றாராம். இதையடுத்து, அவரை மடக்கி பிடித்த போலீஸாா் அவரிடம் ரூ.3 லட்சத்து 36ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனா்.
போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவருடைய பெயா் ராமகிருஷ்ணன் (54) என்றும் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிவதாகவும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வரும் பொது மக்களுக்கு தேவையான வேலைகளை பணம் பெற்றுக்கொண்டு செய்து கொடுப்பதும் தெரியவந்தது.
மேலும், அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கிருந்த ஒரு பீரோவில் கணக்கில் வராத பணம் ரூ.3,250 இருந்ததையும் அதிகாரிகள் கைப்பற்றினாா்.