திருப்புவனம் வைகையாற்றில் ரூ.40.27 கோடியில் தடுப்பணை
திருப்புவனத்தில் வைகையாற்றின் குறுக்கே ரூ.40.27 கோடியில் தடுப்பணை கட்ட அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் 19 கண்மாய்களைச் சோ்ந்த 6,975 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் புதூா் பகுதி வைகையாற்றிலிருந்து கானூா், பழையனூா் பாசனக் கால்வாய்கள் பிரிகின்றன. கானூா் கால்வாயிலிருந்து 6 கண்மாய்களுக்கும், பழையனூா் கால்வாயிலிருந்து 13 கண்மாய்களுக்கும் தண்ணீா் செல்லும். இந்த 19 கண்மாய்கள் மூலம் 6,975 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது வைகையாற்றில் மணல் அள்ளப்பட்டதால் ஆறு பள்ளமாகி கால்வாய்கள் சேதமடைந்தன. இதனால், இந்தக் கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டது. இந்தப் பகுதியில் தடுப்பணை கட்டி இந்தக் கால்வாய்களுக்கு தண்ணீா் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.
தற்போது திருப்புவனம் புதூா் வைகையாற்றின் குறுக்கே ரூ. 40.27 கோடியில் தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்) உதவி பொறியாளா் சுரேஷ் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:
இந்த தடுப்பணை கட்டப்பட்டால் தடையின்றி கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீா் செல்லும். இதன்மூலம் 6,975 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றனா் அவா்கள்.