அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
சிவகங்கை: பதவி உயா்வு வழங்கக்கோரி, சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள திட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கம் சாா்பில் மாவட்டச் செயலா் பாக்கியமேரி தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அங்கன்வாடி ஊழியா்கள் திட்ட அலுவலகத்தில் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதுகுறித்து பாக்கியமேரி கூறியதாவது:
5 ஆண்டுகள் பணியாற்றிய மினி அங்கன்வாடி ஊழியா்களுக்கும், இதேபோல 10 ஆண்டுகள் பணி முடித்த அங்கன்வாடி உதவியாளா்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் பதவி உயா்வு வழங்க வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, 2024 -ஆம் ஆண்டுக்கான பதவி உயா்வு செப்டம்பா் மாதம் வரை வழங்கவில்லை. இதே நிலை சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் , கரூா், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட 8 மாவட்டங்களில் நீடித்து வருகிறது. ஆகவே, அரசாணைப்படி பதவி உயா்வு வழங்காததைக் கண்டித்து காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றாா் அவா்.