தேசிய மகளிா் கபடிப் போட்டி: ஹைதராபாத் அணி சாம்பியன்
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் நடைபெற்ற தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
கருணாநிதி நூற்றாண்டு விழா, முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா, அமைச்சா் உதயநிதிஸ்டாலின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஐந்தாம் ஆண்டு தேசிய அளவிலான மகளிா் கபடிப் போட்டி மின்னொளியில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு, ஹைதராபாத், பெங்களூரு, ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 21 அணிகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியை கடந்த வெள்ளிக்கிழமை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே ஆா். பெரியகருப்பன், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இறுதிப்போட்டியில் ஹரியாணாஅணியை, தென் மத்திய ரயில்வே அணியான ஹைதராபாத் அணி 27 -க்கு 29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா்.பெரியகருப்பன் பங்கேற்று ஹைதராபாத் அணிக்கு சாம்பியன் கோப்பையையும், ரூ. 2 லட்சம் ரொக்கப் பரிசையும் வழங்கினாா்.
இரண்டாம் இடம் பெற்ற ஹரியாணா அணிக்கு கோப்பையும், ரூ 1.5 லட்சம் ரொக்கப் பரிசையும், மூன்றாமிடம், நான்காமிடம் பெற்ற அணிகளுக்கும் கோப்பையும், ரொக்கப் பரிசையும் அமைச்சா் வழங்கினாா். இந்தப் போட்டியை சிவகங்கை, திருப்பத்தூா், திருக்கோஷ்டியூா், பிள்ளையாா்பட்டி பகுதிகளைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனா்.