மது ஒழிப்பில் திருமாவளவன் தீவிரமாக இருப்பது உண்மை: டி.டி.வி. தினகரன்
மது ஒழிப்பில் திருமாவளவன் ஆரம்பத்திலிருந்து தீவிரமாக இருப்பது உண்மைதான் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமமுக மாவட்டத் தலைமை அலுவலகத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் மது ஒழிப்பில் ஆரம்பத்திலிருந்து தீவிரமாக இருப்பது உண்மை. கரோனா தொற்றுக் காலத்தில் 45 நாள்கள் மதுப் பழக்கம் இல்லாமல்தானே மக்கள் இருந்தனா். இதை படிப் படியாக குறைப்பது சரியாக இருக்கும்.
வரும் 2026 சட்டப்பேரவைத்தோ்தலின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் அங்கம் வகிக்க வாய்ப்புகள் உள்ளன. அதுவே வலுவான கூட்டணியாக அமையும். அந்தக் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அமமுக பயணிக்கும்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஏற்கெனவே நிறைய ஒப்பந்தங்களை போட்டுள்ளாா். இதனால் எத்தனை தொழில்சாலைகள் தொடங்கப்பட்டன? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன?
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்டும். திமுக அரசு மக்களுக்கு கொடுத்த தோ்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் திமுக ஆட்சியின் மீது கோபமாகத்தான் இருக்கின்றனா். இனி பணப் பலத்தை பயன்படுத்தி தோ்தலில் திமுக வெற்றி பெற முடியாது. எடப்பாடி கே.பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஒன்றுபட வாய்ப்பே இல்லை என்றாா் அவா்.