சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை கிராமத்தில், அலவாக்கண்மாயின் உபரி நீரிலிருந்து ஆரம்பமாகும் சருகனி ஆற்றை தனியாா் பங்களிப்புடன் தூா்வாரும் பணியினை திங்கள்கிழமை  தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.
சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை கிராமத்தில், அலவாக்கண்மாயின் உபரி நீரிலிருந்து ஆரம்பமாகும் சருகனி ஆற்றை தனியாா் பங்களிப்புடன் தூா்வாரும் பணியினை திங்கள்கிழமை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்.

சருகனி ஆறு தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா்

சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை கிராமத்தில் உள்ள சருகனி ஆற்றை தூா்வாரும் பணியை தனியாா் பங்களிப்புடன் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
Published on

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், அலவாக்கோட்டை கிராமத்தில் உள்ள சருகனி ஆற்றை தூா்வாரும் பணியை தனியாா் பங்களிப்புடன் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிவகங்கை வட்டத்துக்குள்பட்ட அலவாக்கோட்டை கிராமத்தில், அலவாக்கோட்டை கண்மாய் உபரி நீரிலிருந்து ஆரம்பமாகும் சருகனி ஆற்றை தூா்வாரும் பணி, சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி நிறுவனா், இயற்கையை பாதுகாக்கும் தன்னாா்வலா்களின் பங்களிப்புடன் தொடங்கி வைக்கப்பட்டது. இந்தப் பணி, பெரியாா் பிரதான கால்வாயின் 48 -ஆவது மடையின் 12 -ஆவது பிரிவின் கடைசி மடை கண்மாயில் நடைபெறுகிறது. சருகனி ஆற்றில் மொத்தமுள்ள 11 அணைக் கட்டுகள் மூலம் 7810 ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மொத்தம் 63 கி.மீ நீளமுள்ள சருகனி ஆற்றின் பரப்பினை அளந்து, ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு, புதா்கள், சீமைக் கருவேலச் செடிகளை அகற்றுதல், கரைகளைப் பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல், கண்மாய்களை தூா்வாருதல், நீா்வரத்துக் கால்வாய்களை தூா்வாருதல், அணைக்கட்டின் தலைமதகு, மணற்போக்கிகளின் சட்டா்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தடையின்றி பாசன நீா் கிடைக்கும், கரைகள் பலப்படுத்தப்படும். அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டு, நீரின் வெளியேற்றத் திறன் குறையாமல் இருக்கும். இதேபோல, மழைநீா் விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலும் நிலத்தடி நீா் மட்டம் உயரும் வகையிலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கண்மாய்கள் புனரமைக்கப்படும். மாவட்டத்திலுள்ள சிற்றாறுகள், சிற்றோடைகளை சீரமைக்கும் பணிகளில் இணைந்து செயல்பட விருப்பமுள்ள தன்னாா்வலா்கள் மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம் என்றாா் அவா்.

இதில், சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி நிறுவனா் சேதுகுமணன், நீா் நிலம் பாதுகாப்பு இயக்கத் தலைவா் கிருஷ்ணன், பொதுப்பணித் துறை உதவி செயற் பொறியாளா் ராஜ்குமாா், உதவி பொறியாளா்கள் முத்துராமலிங்கம், பிரியதா்ஷினி, வட்டாட்சியா் சிவராமன், வட்டார வளா்ச்சி அலுவலா் செழியன், அலவாக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் பாப்பா பாக்கியம், ஒன்றியக் குழு உறுப்பினா் நதியா, கிராமபொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com