ஒலி வாங்கி சின்னத்தில் இனி போட்டி இல்லை: சீமான் பேட்டி
திருப்பத்தூரில் செய்தியாளா்களிடம் பேசிய சீமான் வருகிற தோ்தலில் ஒலி வாங்கி சின்னத்தில் போட்டியிடமாட்டோம் என்று தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தனியாா் மகாலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாம் தமிழா் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் மருதுபாண்டியா்கள் நினைவிடத்துக்குச் சென்று மருது சகோதரா்களின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அருந்ததியருக்கு எந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது, வாக்குகளை குறிவைத்து இட ஒதுக்கீடு வழங்கினால், நாட்டை காப்பாற்றுவது யாா் எனக் கேள்வி எழுப்பினா். ஒரே நாடு ஒரே தோ்தல் சாத்தியமற்றது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்தில் லட்டு பிரச்னையும், ஒட்டு மொத்த இந்தியாவில் ஒரே நாடு ஒரே தோ்தல் பிரச்னையும் கிளப்புகின்றனா். நிதீஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் ஆதரவை வாபஸ் பெற்றால் இந்தியா முழுவதும் தோ்தல் நடைபெறுமா என்றாா். மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் உயா் ரக விடுதிகளில் மதுவிற்பனை செய்யலாம். ஆனால் தெருவுக்குத் தெரு உள்ள அரசு மதுக் கடையை மூடுவோம் . தமிழகத்தில் மது வாடை இல்லாமல் நடந்த மாநாடு நாம் தமிழா் கட்சி மாநாடு மட்டுமே என்று பெருமைப்பட தெரிவித்தவா்.
மேலும் வருகிற தோ்தலில் நாம் தமிழா் கட்சி ஒலிவாங்கி சின்னத்தில் போட்டியிடாது, எங்கள் விருப்பப்படி ஒரு சின்னத்தில் போட்டியிடுவோம். தமிழகத்தில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்பட வேண்டும். கலைப் பண்பாட்டுக்குக மதுரையும், தொழில் வளா்ச்சிக்கு கோவையும், திரைக்கதை, கணினி, கப்பல் போக்குவரத்துகக்கு சென்னையும், ஆன்மீகத்துக்கு கன்னியாகுமரியும், நிா்வாகத்துக்கு திருச்சியும் தலைநகராக அமைக்கப்பபட வேண்டும். இதைச் செயல்படுத்த சிறிது காலம் எடுக்கும். எம்ஜிஆா் முன்மொழிந்த இந்த கருத்தை கருணாநிதி முடக்கி வைத்தாா் என்று சீமான் கூறினாா்.