கொலை வழக்கில் கட்டட ஒப்பந்ததாரருக்கு ஆயுள் சிறை
வீடு கட்டும் போது ஏற்பட்ட தகராறில் வெல்டரை கட்டையால் அடித்துக் கொலை செய்த ஒப்பந்ததாரருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கையை அடுத்த சோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் லோகநாதன் (57). கட்டட ஒப்பந்ததாரரான இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம், சோழபுரத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா். இங்கு அதே ஊரைச் சோ்ந்தவரும், வெல்டருமான பன்னீா்செல்வம் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது, கடந்த 2021-ஆம் ஆண்டு, ஜூலை 21-ஆம் தேதி கட்டடப் பணி தொடா்பாக லோகநாதனுக்கும், வெல்டா் பன்னீா்செல்வத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த லோகநாதன் அங்கிருந்த கட்டையால் பன்னீா்செல்வத்தைத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த பன்னீா்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, லோகநாதனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வழக்கின் விசாரணை நிறைவடைந்ததையடுத்து, நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.