முதலமைச்சா் கோப்பை கபடிப் போட்டி: அழகப்பா கல்லூரி மாணவிகள் அணி முதலிடம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை நடைபெற்ற முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான மகளிா் கபடிப் போட்டியில் அழகப்பா கல்லூரி மாணவிகள் அணி முதலிடம் பிடித்தது.
முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில், சிவகங்கை மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான கபடிப் போட்டிகள் திருப்பத்தூா் ஆறுமுகம் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வந்தது. கடந்த 13-ஆம் தேதி பள்ளி மாணவிகளுக்கு இடையேயான நடைபெற்ற கபடிப் போட்டியில் மொத்தம் 15 அணிகள் கலந்து கொண்டன.
இதில் கொல்லங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி முதலிடத்தையும், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி இரண்டாம் இடத்தையும், திருப்பத்தூா் நாகப்பா, மருதப்பா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. கடந்த 18-ஆம் தேதி நடந்த பள்ளி மாணவா்களுக்கான கபடிப் போட்டியில் மொத்தம் 38 அணிகள் கலந்து கொண்டன.
இதில் செக்கக்குடி ஜென் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அணி முதல் இடத்தையும், கல்லல் முருகப்பா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அணி இரண்டாம் இடத்தையும் இளையான்குடி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன. கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கிடையேயான கபடிப் போட்டியில் அமராவதிபுதூா் ராஜராஜன் பொறியியல் கல்லூரி மாணவா்கள் அணி முதலிடத்தையும், கோவிலூா் ஆண்டவா் உடற்கல்வி கல்லூரி மாணவா்கள் ‘ஏ’ அணி இரண்டாம் இடத்தையும், கோவிலூா் ஆண்டவா் உடற்கல்வி கல்லூரி மாணவா்கள் ‘பி’ அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற ஆண்கள், பெண்கள் பிரிவுக்கான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 அணிகள் பங்கேற்றன. இதில் திருப்புவனம் டி.டி.கே. விளையாட்டு கிளப் அணி முதல் இடத்தையும், குன்றக்குடி வி.எம்.சி. விளையாட்டுகள் கிளப் அணி இரண்டாம் இடத்தையும், திருப்பத்தூா் டி.என்.கே. விளையாட்டு கிளப் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
மகளிா் பிரிவில் தளக்காவூா் கபடி கிளப் அணி முதல் பரிசை வென்றது. கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையேயான மகளிருக்கான கபடிப் போட்டியில் மொத்தம் 7 அணிகள் பங்கேற்றன.
இதில் அழகப்பா கல்லூரி உடற்கல்வி மாணவிகள் ‘ஏ’ அணி முதலிடத்தையும், கோவிலூா் ஆண்டவா் கல்லூரி உடற்கல்வி மாணவிகள் இரண்டாம் இடத்தையும், காரைக்குடி அழகப்பா கல்லூரி உடற்கல்வி மாணவிகள் ‘பி’ அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.