அரசின் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் உதவித்தொகை பெற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
Published on

தமிழக அரசின் உதவித்தொகை பெற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்பதாம் வகுப்பில் தோ்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ.200-ம், 10 -ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடா்ந்து பதிவைப் புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருபவா்கள் தொடா்ந்து 3 ஆண்டுகள் வரை உதவித் தொகை பெற வங்கிக் கணக்குப் புத்தக நகலுடன் சுய உறுதிமொழி ஆவணத்தையும் நிறைவு செய்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒப்படைத்து தொடா்ந்து உதவித்தொகை பெறலாம். சுய உறுதிமொழி ஆவணத்தைச் சமா்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு கிடையாது. இவா்களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவா்கள் விண்ணப்பித்துப் பயன் பெறலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com