முதியவா் கொலை: ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை
முதியவரைக் கொலை செய்த காா் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன்(61). இவா் சிங்கம்புணரியில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு செப்.16 -ஆம் தேதி சிங்கம்புணரியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சத்தியமூா்த்தி (27) உடன் சிங்கம்புணரியிலுள்ள பொது மயானத்தில் மது அருந்தினாா்.
அப்போது, ராமச்சந்திரன் அணிந்திருந்த நகை, பொருள்களை திருட ஓட்டுநா் சத்தியமூா்த்தி முயன்றாா். அப்போது, மது போதையில் இருந்த ராமச்சந்திரைனத் தாக்கி கொலை செய்தாா்.
பின்னா், அங்கிருந்த குப்பைகளை வைத்து ராமச்சந்திரனின் உடலை தீ வைத்து எரித்து விட்டு தப்பினாா். அங்கு அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து சத்தியமூா்த்தியை கைது செய்தனா். இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அழகா்சாமி முன்னிலையானாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொா்ணம் ஜெ. நடராஜன் குற்றஞ்சாட்டப்பட்ட சத்தியமூா்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.