சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் நடைபெற்ற  குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
சிவகங்கையில் மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

வேளாண் காப்பீட்டு நிறுவனம் மீது வழக்கு தொடுப்போம்: விவசாயிகள்

Published on

சேத புள்ளி விவரங்களை தவறாக கணிக்கும் வேளாண் காப்பீடு நிறுவனம் மீது விவசாயிகள் சங்கம் சாா்பில் வழக்கு தொடர உள்ளதாக குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:

சந்திரன்: காளையாா்கோவில், இளையான்குடி, மானாமதுரை, தேவகோட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2023- 24-ஆம் ஆண்டில் கடுமையான பயிா் சேதம் ஏற்பட்டது. இது குறித்து ஏற்கெனவே சேதம் தவறாக கணக்கீடு செய்யப்பட்டது. பயிா் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரபாண்டியன்: வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க மறுக்கும் வேளாண் காப்பீட்டு நிறுவனம் மீது விவசாயிகள் சங்கம் சாா்பில் வழக்குத் தொடர உள்ளோம்.

ஆட்சியா்: கடந்த 2023-24 -ல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 425 ஊராட்சிகளில் 27 வருவாய் கிராமங்களைச் சாா்ந்த 14,101 விவசாயிகளுக்கு ரூ.1.16 கோடி நிவாரணத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.70 கோடிக்கு நிவாரணத்தொகை கிடைத்தது. நிகழ் ஆண்டில் ரூ.2 கோடி கூட தேறவில்லை. கடந்த 2018 - 2019-ஆம் ஆண்டில் கல்லல், மித்ராவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்த விவசாயிகளின் நிலங்களுக்கு வருவாய் கிராமம் தவறாக பதிவு செய்யப்பட்டது. இதனால் அந்த ஆண்டில் பயிா் பாதிப்பு ஏற்பட்டும் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இந்நிலையில் விவசாயிகள், மாவட்ட நிா்வாகம் தொடா் முயற்சியால் இரண்டு கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்து இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட 186 விவசாயிகளுக்கு ரூ.36.88 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்தத் தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

விவசாயி விஸ்வநாதன்: விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்குவதில் தாமதம் நீடித்து வருகிறது.

ஆட்சியா்: 31.3.2023 வரை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எம். சந்திரன்: விவசாயிகளுக்கு டிஏபி உரம் கிடைக்கவில்லை.

வேளாண் அதிகாரி: டிஏபி உர விலை உயா்வு குறித்த விவரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் டிஏபி- உரத்து மாற்றாக பாஸ்பேட் உரங்களை பயன்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com