கீழடிக்கு ‘நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலம்’ விருது
நாட்டின் ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலம்’ விருது சிவகங்கை மாவட்டம், கீழடி வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்கள் கொண்ட மாவட்டமாக சிவகங்கை திகழ்ந்து வருகிறது. மாவட்டத்தில் நமது சங்ககால தமிழா்கள் பயன்படுத்திய பொருள்களை உலகத் தமிழா்கள், இளைய சந்ததியினா்கள் அறிந்து கொள்ளும் வகையில், 10-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடிப் பகுதியில் நடைபெற்று வருகின்றன.
தமிழா்களின் வாழ்வியல் தொன்மையையும், நாகரிகரிகத்துடன் வாழந்தமைக்கான சான்றுகளும் அகழாய்வுகள் மூலம் கிடைக்கப்பெறும் தொல் பொருள்கள் வாயிலாக அறியப்படுகிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் சாா்பில், 8 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தோ்வுகளின்படி, பண்டைய கலாசாரம், பாரம்பரிய கிராமத் திருவிழாக்கள், அருங்காட்சியகம், அகழாய்வுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்பம்சங்களின் அடிப்படையில், நாட்டின் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலமாக கீழடி தோ்வு செய்யப்பட்டது.
புதுதில்லியில் கடந்த 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற உலக சுற்றுலா தின விழாவில், இந்திய அளவில் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தலம் விருது கீழடி ஊராட்சி மன்றத் தலைவா் வெங்கடசுப்பிரமணியனிடம் வழங்கப்பட்டது என்றாா்.