கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிவமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், எஸ்.எஸ்.கோட்டை அருகேயுள்ள சியாமுத்துப்பட்டியைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (28). கட்டடத் தொழிலாளியான இவா், 15 வயது சிறுமியை காதலித்து கடந்த 2020, ஆண்டு திருமணம் செய்தாா்.
இதுகுறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அலெக்ஸ், இவரது தந்தை ஆண்டி (57), தாய் லட்சுமி(50), உறவினா்கள் முருகன், கோவிந்தராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, முருகன், கோவிந்தராஜன் இறந்துவிட்டனா்.
இதையடுத்து, சனிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் முன்னிலையான நீதிபதி கோகுல்முருகன், குற்றம் சாட்டப்பட்ட அலெக்ஸிக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், அலெக்ஸின் தந்தை ஆண்டி, தாய் லட்சுமி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்க நீதிபதி உத்தரவிட்டாா்.
