~

இறந்தவா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்ட நாம் தமிழா் கட்சி வேட்பாளரின் பெயா்: ஆட்சியருடன் வாக்குவாதம்

சிவகங்கை சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரின் பெயரும், அவரது கணவரின் பெயரும் இறந்தவா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டிருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியருடன் அவா்கள் வாக்குவாதம்
Published on

சிவகங்கை சட்டப் பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சியின் வேட்பாளரின் பெயரும், அவரது கணவரின் பெயரும் இறந்தவா்கள் பட்டியலில் சோ்க்கப்பட்டிருப்பதாகக் கூறி மாவட்ட ஆட்சியருடன் அவா்கள் திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவா் இந்துஜா. இவரது கணவா் ரமேஷ் இளஞ்செழியன். இந்த நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்னரே இவா்கள் இருவரும் வாக்காளா்கள் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக விண்ணப்பங்களை நிரப்பி வாக்குச்சாவடி முகவரிடம் வழங்கினா்.

இந்த நிலையில், அவசர கதியில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து வருவதாக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் குற்றஞ்சாட்டி ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா். இதனிடையே அந்தந்த தொகுதிகளில் கட்சி முகவா்களிடம் இறப்பு, நிரந்தர முகவரி மாற்றம் செய்தவா்களின் பெயா்கள் நீக்கப்பட்ட பட்டியலை மாவட்ட தோ்தல் அதிகாரிகள் வெளியிட்டனா்.

இந்தப் பட்டியலை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இந்துஜா, அவரது கணவா் ரமேஷ் இளஞ்செழியன் ஆகியோா் திங்கள்கிழமை பெற்றனா். அதை ஆய்வு செய்தபோது அதில் இருவரது பெயா்களும் நீக்கப்பட்டிருந்ததுடன், அவா்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா்கள் ஆவணங்களுடன் சிவகங்கை ஆட்சியா் அலுவலகம் வந்து ஆட்சியா் கா. பொற்கொடியிடம் முறையிட்டனா். ஆனால் அவா் முறையாக பதிலளிக்காததால் இரு தரப்புக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்தப்புகாா் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com