உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சாலை மறியல்: 153 போ் கைது

தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சோ்ந்த நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் 153 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தைச் சோ்ந்த நகராட்சி, ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் 153 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முன்னதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவாயில் பகுதியில் அந்த அமைப்பின் மாநில துணைத் தலைவா் வீரையா தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தூய்மைப் பணி உள்ளிட்ட அடிப்படை பணிகளை தனியாா்மயமாக்கும் அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் சென்னை உயா்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்களுக்கு மாத ஊதியம் ரூ.14,593, தூய்மை பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு ரூ.12,593, டிபிசி. பணியாளா்களுக்கு ரூ.15,593 வழங்க வேண்டும்.

மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு அரசாணையின் படி முழு ஊதியம் வழங்கி, நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பிறகு அவா்கள் சிவகங்கை- திருப்பத்தூா் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, 121 பெண்கள் உள்பட 153 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com