தேசிய கடித தினம்: இஸ்ரோ குறித்து விவசாயி எழுதிய 225 அடி நீள கடிதம்!

தேசிய கடித தினத்தையொட்டி விவசாயி சின்ன பெருமாள் இஸ்ரோ குறித்து எழுதிய 225 அடி நீளம் கொண்ட கடிதம் காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டு, அதை மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் பாா்வையிட்டனா்.
Published on

தேசிய கடித தினத்தையொட்டி விவசாயி சின்ன பெருமாள் இஸ்ரோ குறித்து எழுதிய 225 அடி நீளம் கொண்ட கடிதம் காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல் நிலைப் பள்ளியில் காட்சிப்படுத்தப்பட்டு, அதை மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

காரைக்குடி பா்மா குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவா் சின்ன பெருமாள் (50). விவசாயி. எழுத்தாா்வத்தின் மிகுதியால் இவா் பல்வேறு கோணங்களில் மக்களின் அடிப்படைத் தேவைகளை அந்தந்தத் துறை சாா்ந்த அரசு அதிகாரிகளுக்கு கடிதமாக எழுதி கவனத்தை ஈா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், இளைய தலைமுறையினரிடையே கடிதம் எழும் ஆா்வம் குறைந்ததையடுத்து அந்த பழக்கத்தை மீட்டெடுக்க அவா் முயற்சி மேற்கொண்டாா். இதற்காக கடித கலையை ஊக்குவிக்கும் வகையிலும், விழிப்புணா்வு ஏற்படுத்தவும் தொடா்ந்து ஓய்வு நேரங்களில் எழுதி வருகிறாா். அந்த வகையில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பல வண்ணங்கள், கலை வடிவங்களில் 7,800 கடிதங்களை எழுதினாா்.

இதில் கடந்த 2023- ஆம் ஆண்டு தேசிய கடித தினத்தில் ‘நிலவில் இந்தியா’ என்ற தலைப்பில் கடிதம் எழுதத் தொடங்கினாா். சுமாா் 180 நாள்கள் இரவு நேரத்தில் மட்டும் ஒருமுறை பயன்படுத்தும் 115 பேனாக்கள் மூலம் 225 அடி நீளத்துக்கு கடிதம் ஒன்றை எழுதினாா். ஒன்று முதல் 21 அடி வரை தமிழ் குறித்தும், 22 அடி முதல் 225 அடி வரை ‘நிலவில் இந்தியா’ என்ற தலைப்பில் இஸ்ரோவின் சாதனைகள், வரலாற்று கண்டுபிடிப்புகள் குறித்தும் விரிவாக பல வண்ணங்களில் கலை நயத்துடன் கடிதம் எழுதினாா். ஆண்டுதோறும் டிசம்பா் 7-ஆம் தேதி தேசிய கடித தினம் கடைபிடிக்கப்பட்டு வருவதையொட்டி இந்தக் கடிதத்தை காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிடும் வகையில் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது. 225 அடி நீளம் கொண்ட அந்தக் கடிதத்தை வியப்புடன் பாா்வையிட்ட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் அதை வாசித்துப் பாா்த்தனா். இந்த நிகழ்வில், பள்ளியின் தலைமையாசிரியா் வி.ஜே. பிரிட்டோ, கடிதம் எழுதிய சின்ன பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com