சிவகங்கையில் தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி யூரியா உரம் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வேளாண் துறை தெரிவித்தது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு. சுந்தரமகாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா பருவத்தில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தின் பெரும்பாலான வட்டாரங்களில் பயிா்கள் 2, 3-ஆவது தவணை உரமிடும் நிலையை எட்டியுள்ளது.
விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து உரங்களும் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உர விற்பனை நிலையங்கள் மூலமாக விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி மானாமதுரை வட்டாரம் மிளகனுாா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் மக்கள் கூட்டம் மிகுதியால் யூரியா உரம் விநியோகம் செய்ய இயலவில்லை என்ற செய்தி வெளியானது.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அறிவுரைப்படி ஏற்கெனவே அந்தச் சங்கத்தில் 490 மூட்டைகள் யூரியா உரம் இருந்த நிலையில், மேலும் 525 மூட்டைகள் டான்பெட் மூலம் வரவழைக்கப்பட்டு மொத்தமாக 1,015 மூட்டைகள் யூரியா உரம் திங்கள்கிழமை சிவகங்கை மாவட்ட வேளாண் இணை இயக்குநா், வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு), மானாமதுரை வட்டார வேளாண் உதவி இயக்குநா், கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா், அலுவலா்கள் முன்னிலையில் விவசாயிகளுக்குத் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது மாவட்டத்தில் யூரியா 1,834 மெ. டன்கள், டிஏபி 618 மெ. டன்கள், பொட்டாஷ் 514 மெ. டன்கள், காம்ப்ளக்ஸ் 2,179 மெ. டன்கள் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உரக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கடன் பெறும், கடன் பெறாத விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள பரப்புக்கு ஏற்றவாறு தங்கள் ஆதாா் அட்டையை எடுத்துச் சென்று விற்பனை முனைய கருவி மூலமாக ரசீது பெற்று தேவையான உரங்களைப் வாங்கிச் செல்லலாம் என்றாா்.
